இந்தியா

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: லாலு பிரசாத்தின் இளைய மருமகனுக்கு அமலாக்கத் துறை சம்மன்

DIN

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மருமகன் ராகுல் யாதவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: ரயில்வேத் துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்த காலத்தில், ரயில்வேக்குச் சொந்தமான ஹோட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சுஜாதா ஹோட்டல் நிறுவனத்துக்கு அளித்து, அதற்குப் பிரதிபலனாக பாட்னாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலத்தை பினாமி பெயரில் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், சுஜாதா ஹோட்டல் இயக்குநர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார், டிலைட் மார்கெட்டிங் நிறுவனம் (தற்போது லாரா நிறுவனம்), ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குநர் பி.கே. கோயல் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் மேற்கண்ட நபர்களுக்கு எதிராக தனியாக வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, லாலு பிரசாத் யாதவின் 4-ஆவது மகளான ராகினியின் கணவர் ராகுல் யாதவ் வங்கிக் கணக்கில் இருந்து ராப்ரி தேவிக்கு சந்தேகத்துக்கு இடமான வழியில் ரூ.1 கோடி அனுப்பப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது. இதுகுறித்து ராகுல் யாதவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
எனவே, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.17) நேரில் ஆஜராகக்கோரி, ராகுல் யாதவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதே வழக்கில், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
முன்னதாக, லாலுவின் மூத்த மகளும், எம்.பி.யுமான மிஸா பார்தி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோருக்கு எதிராகவும் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT