இந்தியா

காவிரி: நீதிமன்றம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

DIN

காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மாநிலத் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார். 
தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
மாநில அரசால் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புப் பணிகள்மீது ஜி.எஸ்.டி. விதிக்கக் கூடாது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் அமைப்பது, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பாதிப்பை தவிர்க்க நிரந்தர நடவடிக்கையாக முழுமையான வெள்ள மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவது ஆகியவை குறித்தும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல முக்கியமான கோரிக்கைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரதமருடன் அவர் கலந்துபேசி நல்ல முடிவை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கிறேன்.
மருத்துவ மாணவர் மரணம்: தமிழக மருத்துவ மாணவர் சரத் பிரபு தில்லியில் மரணமடைந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இது குறித்து தற்போது பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகுதான் மரணத்திற்கான காரணம் தெரியவரும். எம்ஜிஆர் பிறந்த தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது தொடர்பாக ஏற்கெனவே முதல்வர் மூலம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அடுத்தமுறை வரும் போது இது தொடர்பாக பிரதமரைச் சந்தித்துப் பேசுவேன். 
மக்கள்தான் ஏஜமானர்கள்: தற்போதைய சூழலில் யார் வேண்டுமானலும் அரசியல் கட்சி ஆரம்பிக்காலம். மக்களையும் சந்திக்கலாம். மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் கருத்தின் அடிப்படையில்தான் அந்த அரசியல் இயக்கம் வெற்றி பெறுமா?, பெறாதா? என்பது முடிவு செய்யப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் எண்ணங்களின் அடிப்படையில் மக்கள் நல அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கும், தமிழக அரசுக்கும் இடையே எந்தவித விரிசலும் இல்லை. இனிமேலும் ஏற்படாது.
காவிரி விவகாரம்: தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரைப் பங்கீடு செய்வது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007-இல் வெளியிட்ட இறுதித் தீர்ப்பில் 188 டிஎம்சி நீர் தமிழகத்துக்குத் தரப்பட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் மூலம் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அத்தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. எனினும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கில் இரு வாரங்களில் தீர்ப்பு வர உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை நியாயமானது. உரிய தண்ணீரைத் தர கர்நாடகம் மறுத்தால், நீதிமன்றத்தை நாடி தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னதாக, பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதித் துறை (செலவினம்) செயலர் எம்.ஏ. சித்திக், துணைச் செயலர்கள் எம்.அரவிந்த், கிருஷ்ணன் உன்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT