இந்தியா

ஓரினச்சேர்க்கை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்: மத்திய அரசு

DIN

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவு செல்லத்தக்கதா? என்பது தொடர்பான முடிவை உச்ச நீதிமன்றத்திடமே விட்டுவிடுவதாக மத்திய தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவின்படி ஓரினச்சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும். குற்றத்தின் தன்மையைப் பொருத்து 10 ஆண்டுகள் வரையோ அல்லது ஆயுள் சிறையோ கூட விதிக்க அந்த சட்டப் பிரிவு வழிவகை செய்கிறது.
இந்நிலையில், அந்த சட்டப் பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், ஆர்.எஃப்.நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவு, அரசமைப்புச் சட்டரீதியில் செல்லத்தக்கதா? என்பது தொடர்பான முடிவை, உச்ச நீதிமன்றத்திடமே விட்டுவிடுகிறோம். இதுதவிர வேறு விவகாரங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டியிருந்தால், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும். ஏனெனில், 377-ஆவது சட்டப் பிரிவு தவிர இதர விவகாரங்களில் விரிவான ஆலோசனைகள் தேவைப்படுகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது துணையை தேர்வு செய்வதற்கான சுதந்திரத்துக்கும் வரம்பு இருக்க வேண்டும். ஒருவர், தனது சகோதரரையோ, சகோதரியையோ துணையாக தேர்வு செய்வதை ஹிந்து திருமணச் சட்டம் அனுமதிக்காது' என்றார்.
அப்போது, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறுக்கிட்டு, பாலியல் ரீதியாக மட்டுமே இந்த விவகாரத்தை நாங்கள் அணுகவில்லை. வயது வந்த இருவர், பரஸ்பர சம்மதத்துடன் சேர்ந்து வாழ்ந்தால், அந்த உறவு பாதுகாக்கப்பட வேண்டும்; இதுதொடர்பாகவே நாங்கள் பரிசீலிக்கிறோம்' என்றார்.
முன்னதாக, இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ஓரினச்சேர்க்கை வழக்கு தொடர்பாக நீதிபதிகள் விளக்கமளித்தனர். அவர்கள் கூறுகையில், 377-ஆவது சட்டப் பிரிவுக்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்களை மட்டுமே நாங்கள் ஆய்வுக்குட்படுத்துவோம் . ஓரினச்சேர்க்கை திருமணங்களையோ அல்லது அவர்களது குடும்ப வாழ்க்கை தொடர்பான விவகாரங்களையோ விசாரிக்க இயலாது' என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT