இந்தியா

புதிய அரசியல் கட்சி: சரத் யாதவ் பதிலளிக்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

தினமணி

புதிய அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் நிதீஷ்குமார் அணியைச் சேர்ந்த ஜேடியு மாநிலங்களவை எம்.பி. ராம் சந்திர பிரசாத் சிங், தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,  "சரத் யாதவ், லோக்தந்திரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை நிறுவி, அதில் இணைந்து விட்டார். இதுதொடர்பான ஆவணங்களை அவர் தாக்கல் செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஹிமா கோலி, ரேகா பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. சரத் யாதவ் தொடுத்துள்ள வழக்கின் விசாரணையை, இந்த மனு தாமதப்படுத்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் இணைந்து நிதீஷ் குமார் கடந்த ஆண்டு ஆட்சியமைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஜேடியு கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ், தனி அணியாகச் செயல்பட்டார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் லோக்தந்திரிக் ஜனதா தளம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்.
இதனிடையே, அவரை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் சரத் யாதவ் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சரத் யாதவ் அணி புதிய கட்சியைத் தொடங்கி விட்டது என்று நிதீஷ் குமார் தரப்பு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT