இந்தியா

பெண்களால் 41 நாள்கள் விரதத்தை கடைப்பிடிக்க முடியாது: சபரிமலை வழக்கில் தேவஸ்வம்போர்டு வாதம்

DIN

சபரிமலை புனிதப்பயணத்தை மேற்கொள்ளஅடிப்படைத் தேவையான 41 நாள்கள் கடும் விரதத்தை, பெண்களால் கடைப்பிடிக்க முடியாது. எனவே தான் அவர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்று தேவஸ்வம் போர்டு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

கேரளத்தில் உள்ள சபரிமலைக் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கியது.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தேவஸ்வம் போர்டு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.எம்.சிங்க்வி, சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கான அடிப்படைத் தேவையான 41 நாள்கள் கடும் விரதத்தை, பெண்களால் கடைப்பிடிக்க முடியாது என்றும், இதன் காரணமாகவே, குறிப்பிட்ட வயதிலுள்ள பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் வாதாடினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: 
41 நாள்கள் கடும் விரதத்தைப் பெண்கள் கடைப்பிடிப்பது கடினம் தான். காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையே பெண்களுக்கு எதிரான பாகுபாடாக இன்று மாறியுள்ளது. 

இந்த நடைமுறை நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறுவதைக் காட்டிலும், நெடுங்காலமாக பக்தர்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது என்றே கூற வேண்டும். ஆனால், மக்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தில், இத்தகைய நம்பிக்கைகளை திணிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அரசியலமைப்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான உரிமைகளும், பெண்களுக்கும் பாகுபாடுகள் ஏதுமின்றி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களின் உடலியல் சார்ந்து ஏற்படும் இயற்கை நிகழ்வான மாதவிலக்கைக் காரணம் காட்டி,கோயிலுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு 10 வயதுக்கு குறைவான சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT