இலங்கை தேசிய ஆம்புலன்ஸ் சேவை: காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
இலங்கை தேசிய ஆம்புலன்ஸ் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இலங்கை தேசிய ஆம்புலன்ஸ் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இலங்கை தேசிய ஆம்புலன்ஸ் சேவைக்காக இந்தியா முதற்கட்டமாக 22.8 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியது. பிறகு, 2-ஆவது கட்டமாக இந்த சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக 15.2 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியது.
முதற்கட்டமாக வழங்கிய தொகையின் மூலம் 88 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த சேவையை விரிவுப்படுத்துவதற்காக 209 ஆம்புலன்ஸ் வாகனங்களை இலங்கை வாங்கியது.
Advertisement
இந்த தேசிய ஆம்புலன்ஸ் சேவையை இந்திய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். இதன் தொடக்க விழாவில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் பங்கேற்றார்.
இந்த தொடக்க விழாவில் மோடி பேசியதாவது,
"இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுப்படுத்த இந்தியா உதவி புரியும் என்று கடந்த ஆண்டு எனது பயணத்தின் போது நான் வாக்குறுதி அளித்தேன். அதனை குறுகிய காலகட்டத்தில் நிறைவேற்றியதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கையை வெறும் அண்டை நாடாக மட்டும் பார்க்கவில்லை. இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசியாவின் நம்பகத்தன்மையான சிறந்த கூட்டாளியாகவே பார்க்கிறேன். இருநாட்டுடைய வளர்ச்சிப் பார்வையை நிஜமாக்க இலங்கையுடனான வளர்ச்சி ஒத்துழைப்பு முக்கியமானது. நமது மக்கள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்க வேண்டும். அதன்மூலம் ஒருவரை ஒருவர் அறிய முடியும், மேலும் நெருக்கமாகலாம்.
இந்த அவசர கால சேவையை நிறுவுதல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தில் இலங்கையின் கூட்டாளியாக இந்தியா இருப்பது எதேர்ச்சையானது அல்ல. இலங்கையின் சிறந்த மற்றும் மோசமான நாட்களிலும் இந்தியாவே முதல் ஆளாக உதவி புரிய இலங்கை முன்பு நிற்கும்" என்றார்.