இந்தியா

காஷ்மீரில் காவலரை கடத்தி கொன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

தினமணி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் காவலர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்த பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒரு பயங்கரவாதி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆவார்.
 குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் முகமது சலீம் ஷா என்பவர் பயங்கரவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டார். இந்நிலையில், அவரது சடலம், ரேத்வானி பயேம் எனும் பகுதியில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சலீம் ஷா சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு அடையாளமாக அவரது உடலில் ஏராளமான காயங்கள் இருந்தன.
 இந்நிலையில், சலீம் ஷாவை கொலை செய்த பயங்கரவாதிகள், குல்காம் மாவட்டம், ரேத்வானி பகுதியில் உள்ள குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
 இதன்பேரில், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
 இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். எனவே இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. இந்த சண்டையில் வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர் ஆவார். 3 பேரின் சடலங்கள் அருகிலிருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள், தோட்டாக்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 காவலர் சலீம் ஷாவை கொலை செய்தது இந்த 3 பயங்கரவாதிகள் என்பதும் காவல்துறையால் உறுதிப்படுத்தப்பட்டது. 3 பேரும், லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள்.
 பாகிஸ்தானியரின் பெயர் மொவாயா என்பதும், காஷ்மீரில் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் அவருக்குத் தொடர்பிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 ஊடுருவல்காரர் சுட்டுக் கொலை: இதனிடையே, கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய பகுதிக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் ஊடுருவ முயற்சி மேற்கொண்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அவரை அவர்கள் எச்சரித்தனர்.
 ஆனால் அந்த நபர், அதை பொருட்படுத்தவில்லை. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து அவரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டியாக அவர் செயல்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT