முகப்பு
இந்தியா

டிஆர்எஸ் உருவாக்கும் கூட்டணி பாஜகவின் மறைமுகத் திட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்

கூட்டாட்சி முன்னணி என்ற பெயரில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் மேற்கொண்டுள்ள கூட்டணி முயற்சி பாஜகவின் மறைமுகத் திட்டம் என்று இந்திய

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

கூட்டாட்சி முன்னணி என்ற பெயரில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் மேற்கொண்டுள்ள கூட்டணி முயற்சி பாஜகவின் மறைமுகத் திட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இருநாள் தேசிய செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. பாஜகவைத் தோற்கடித்த பிராந்திய அளவில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்திலேயே அழைப்பு விடுத்தது. அது சரியானது என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் கைகோக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி கூட்டாட்சி முன்னணியை அமைக்கப்போவதாகக் கூறி வருகிறது. இது எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதற்கு எதிரான பாஜகவின் மறைமுகத் திட்டம்தான். இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோடி அரசு மக்களை எந்த வகைகளில் எல்லாம் ஏமாற்றி வருகிறது என்பது குறித்து பிரசார இயக்கத்தை முன்னெடுக்க இருக்கிறோம். பாஜக அரசிடம் இருந்து தேசத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காக்க வலியுறுத்தி நாட்டின் நான்கு முனைகளில் இருந்தும் பிரமாண்ட பேரணியை நடத்த இருக்கிறோம். இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார் 
சுதாகர் ரெட்டி.
 

முழு கட்டுரையைப் படிக்க →