ரயிலில் அதிக சுமை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம்: இந்திய ரயில்வே முடிவு
ரயிலில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு பொருள்களை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு, 6 மடங்கு அபராதம் விதிப்பதென்று இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயிலில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு பொருள்களை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு, 6 மடங்கு அபராதம் விதிப்பதென்று இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில் பயணத்தின்போது பயணிகள் அனுமதிக்கப்பட்டதை விட மிக அதிகமாக பொருள்களை எடுத்து வருவதாகவும், இதனால் சக பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ரயில்வேக்கு புகார்கள் வந்தன.
இதை கவனத்தில் கொண்டு, ரயிலில் பயணத்தின்போது அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக பொருள்களை எடுத்து வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் விதிகளை தீவிரமாக அமல்படுத்துவது என்று இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தில்லியில் இந்திய ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனுமதிக்கப்பட்டதை விட அதிக பொருள்களை எடுத்து வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் விதிகள், 30 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டுவிட்டன. அதை தீவிரமாக அமல்படுத்தவே ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி, இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடைக்கு, லக்கேஜ் கட்டணமாக ஒன்றரை மடங்கு கட்டணம் பெறப்படும். இதைக் காட்டிலும் அதிக எடையுடைய பொருள்களை கொண்டு வந்தால், லக்கேஜ் கட்டணத்தை விட 6 மடங்கு அபராதமாக வசூலிக்கப்படும்.
தூங்கும் வசதி பெட்டிகள், 2ஆம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் நபர்கள், முறையே 40 கிலோ, 35 கிலோ எடையுடைய பொருள்களை இலவசமாக கொண்டு செல்லலாம். அதுமட்டுமன்றி, தூங்கும் வசதி பெட்டிகளில் பயணி ஒருவர் அதிகப்பட்சமாக 80 கிலோ பொருள்களையும், 2ஆம் வகுப்பு பெட்டிகளில் அதிகப்பட்சமாக 70 கிலோ பொருள்களையும் எடுத்து வரலாம். அப்போது இலவசமாக அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக எடையுடைய பொருளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கும் அதிக எடையுடைய பொருள்களை, பயணிகள் உடன் எடுத்து வரக் கூடாது. பொருள்களுக்கான பிரத்யேக பெட்டிகளில்தான் அவை எடுத்து வரப்படும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
பயணிகள் எடுத்து வரும் பயணப் பெட்டி, சூட்கேஸ்கள், டப்பாக்கள் ஆகியவை ரயில்வேயில் குறிப்பிடப்பட்ட அளவுகளிலேயே இருக்க வேண்டும். அதைவிட அளவில் பெரிய பொருள்கள் அனுமதிக்கப்படாது. அவற்றை, ரயிலில் இருக்கும் பொருள்களுக்கான பெட்டிகளிலேயே எடுத்து வர வேண்டும். இதுதொடர்பாக வரும் 6ஆம் தேதி வரை, பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே தீர்மானித்துள்ளது என்றார் அவர்.