முகப்பு
இந்தியா

சிவசேனை கட்சி அமைச்சர் ராஜிநாமா

மகாராஷ்டிர கூட்டணி அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள சிவசேனை கட்சியின் தீபக் சாவந்த் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

மகாராஷ்டிர கூட்டணி அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள சிவசேனை கட்சியின் தீபக் சாவந்த் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் அவர் அளித்துள்ளார். கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட உத்தேசித்திருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்ததாகத் தெரிகிறது.
பாஜக தலைமையிலான மகாராஷ்டிர கூட்டணி அரசில் சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் தீபக் சாவந்தும் ஒருவர். அந்த மாநில சட்ட மேலவை உறுப்பினரான அவர், கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது சட்டமேலவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையவுள்ளது. அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பை சிவசேனை வழங்கப் போவதில்லை எனத் தெரிகிறது. இத்தகைய சூழலில், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்த சாவந்த், வரும் காலங்களில் தீவிரமாக கட்சிப் பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அவர் திங்கள்கிழமை அளித்தார். அதேவேளையில், மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் இன்னமும் சாவந்த் பதவி விலகல் கடிதத்தை வழங்கவில்லை.
 

முழு கட்டுரையைப் படிக்க →