இந்தியா

4-ஆவது நாளாக தொடரும் கேஜரிவாலின் அறப்போராட்டம்

DIN

தில்லி அரசு உயரதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாகப் பணிக்குத் திரும்ப உத்தரவிடக் கோரியும், துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன் கிழமையும் நீடித்தது.

தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்கக் கோரியும் துணைநிலை ஆளுநர் அனில் பஜ்யாலை கேஜரிவால் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினர்.

பின்னர், தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைநிலை ஆளுநர் மாளிகையில் உள்ள ஆளுநர் அலுவலக வரவேற்பு அறை சோஃபாவிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். 


தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அவரைத் தொடர்ந்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் புதன்கிழமை காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

கேஜரிவாலின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் வருகின்றன. இருப்பினும் போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) 4-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இன்று காலை உண்ணாவிரதம் இருக்கும் அமைச்சர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்களது உடல் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கேஜரிவால் மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இருந்த படியே தங்களது அலுவல் கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு கேஜரிவால் இல்லத்தில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. 

இன்று காலை கேஜரிவால் சுட்டுரை பக்கத்தில் கூறுகையில், "சரியாக சிந்திப்பவர்கள் கேட்கும் கேள்விகள் ஒன்று தான் - ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பை மத்திய அரசு ஊக்குவிப்பது ஏன்? ரேஷன் பொருட்களை வீட்டில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை மத்திய அரசு தடுப்பது ஏன்? இது தில்லி மக்களின் சாதாரண சர்ச்சை ஏற்படுத்தாத கோரிக்கைகள்.

இந்த கோரிக்கைகளை தவறு என்று உலகத்தில் யார் சொல்வார்கள்? இது ஏன் நடக்காமல் இருக்கிறது. இன்று 4-ஆவது நாள். அவர்களுடைய நோக்கம் சரியானதாக எனக்கு தோன்றவில்லை" என்றார். 

கேஜரிவால் மற்றும் அமைச்சர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று மெழுகுவர்த்தி பேரணி மூலம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் இல்லத்தில் போராட்டம் நடத்தப்வோவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கேஜரிவாலின் இந்த போராட்டம் 4-ஆவது நாளாக நீடிப்பதை அடுத்து இந்தியா முழுவதும் மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT