இந்தியா

கேஜரிவாலின் உள்ளிருப்புப் போராட்டம் - அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

DIN

ஆளுநர் மாளிகையில் 9-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வரும் தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 

தில்லியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பணிப்புறக்கணிப்பு செய்வதாக ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி தில்லி முதல்வர் கேஜரிவால் தலைமையிலான 4 பேர் கொண்ட அமைச்சர் குழு துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை கடந்த 11-ஆம் தேதி சந்தித்தனர். பின்னர், இந்த விவகாரத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை துணைநிலை ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்தனர். 

பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். 

இதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேஜரிவாலின் அலுவலகத்தில் தர்னா போராட்டத்தையும் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், நேற்று (திங்கள்கிழமை) தில்லி உயர்நீதிமன்றத்தில் கேஜரிவாலின் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்துக்கு எதிராக 2 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்காத உயர்நீதிமன்றம் அடுத்த விசாரணையை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், கேஜரிவாலின் இந்த தர்னா போராட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

ஆனால், இந்த வழக்கை விசாரித்த கோடை விடுமுறை நீதிபதிகள் உச்சநீதிமன்றம் திறந்த பிறகே இந்த வழக்கை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். 

இந்த பொதுநல வழக்கில் கூறப்பட்டதாவது, இந்த விவகாரம் குறித்து தில்லி உயர்நீதிமன்றம் நேற்று 22-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது. தற்போது தில்லி மக்கள் கடுமையான தண்ணீர் வறட்சியை சந்தித்து வருகின்றனர். மேலும், அதுமட்டுமின்றி அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் இருப்பதாக தில்லி அரசும், பணிப்புறக்கணிப்பு செய்யவில்லை என்று துணைநிலை ஆளுநரும் கூறுவதில் பொய் வாக்குமூலம் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்த பொதுநல வழக்கை ஹரிநாத் ராம் தொடர்ந்தார். அவருக்காக வழக்கறிஞர் சஷாங்க் சுதி உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி, ராகுல் முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம்!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி?

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT