இந்தியா

காஷ்மீர் ஐஎஸ் தலைவர் உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: காவலர், பொதுமக்களில் ஒருவரும் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தடை செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநில ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் (ஐஎஸ்ஜேகே) தலைவர் உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், காவலர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுஃப்வாரா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர், காவல்துறையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) ஆகியோர் அடங்கிய கூட்டுப் படையினர், அந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், ஜம்மு-காஷ்மீர் மாநில ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் தாவூத் அகமது சூஃபி மற்றும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த அமைப்பு, ஈராக், சிரியாவில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் துணை அமைப்பாகும். காஷ்மீரில் கொலை, கல்வீச்சு சம்பவங்களில் இந்த அமைப்புக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இருவர் பலி: துப்பாக்கிச் சண்டையில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இதனிடையே, சம்பவ இடத்தில் திரண்ட உள்ளூர் இளைஞர்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர். இதில், பலர் காயமடைந்தனர் என்றார் அந்த அதிகாரி.
இணையச் சேவை முடக்கம்: இதனிடையே, சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர், அனந்த்நாக், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் செல்லிடப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக கடந்த செவ்வாய்க்கிழமை விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து, அங்கு ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. இந்தச் சூழலில், பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரை வரும் 28-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த வெற்றி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினர் 9 பேர் காயம்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வெள்ளிக்கிழமை சட்டம்-ஒழுங்கு பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையினர் 9 பேர் காயமடைந்தனர். 
தலைமைக் காவலர் மரணம்: ஸ்ரீநகரில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த தலைமைக் காவலர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT