கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ஜாமீன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனின் ஜாமீன் மனு மீதான உத்தரவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனின் ஜாமீன் மனு மீதான உத்தரவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன், தில்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் கடந்த 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர், இரு முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி பாஸ்கர ராமன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'இந்த வழக்கில், பாஸ்கர ராமனை மேற்கொண்டு சிறையில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை' என்று வாதிட்டார். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான உத்தரவை மார்ச் 7-ஆம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரம் முறைகேடான வழிகளில் சேர்த்த சொத்துகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்குவதற்கு ஆடிட்டர் பாஸ்கர ராமன் உதவி செய்து வந்தது தங்களது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.