வங்கிக் கடன் மோசடி வழக்கு: பஞ்சாப் முதல்வர் மருமகனிடம் சிபிஐ விசாரணை
சிம்பெளலி சர்க்கரை ஆலைக்காக, ஓரியண்டல் வங்கியில் ரூ. 98 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த ஆலையின் தலைமை இயக்குநரும், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்
சிம்பெளலி சர்க்கரை ஆலைக்காக, ஓரியண்டல் வங்கியில் ரூ. 98 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த ஆலையின் தலைமை இயக்குநரும், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மருமகனுமான குர்பால் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் ஜி.எஸ்.சி.ராவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்றான சிம்பௌலி சர்க்கரை ஆலை, உத்தரப் பிரதேசத்தில் இயங்கி வருகிறது.
இந்த ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு கொடுப்பதாகக் கூறி, சண்டீகரில் உள்ள ஓரியண்டல் வங்கியில் ரூ.97.85 கோடியைக் கடன் வாங்கியுள்ளது. அந்த பணத்தை விவசாயிகளுக்கு கொடுக்காமல், ஆலை நிர்வாகிகள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, ரூ.97.85 கோடி கடனைத் திருப்பிச் செலுத்துவதாகக் கூறி, அதே வங்கியிடம் இருந்து ரூ.110 கோடியை ஆலை நிர்வாகம் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் வாங்கியது.
அந்தத் தொகையை, ஆலை நிர்வாகம் திருப்பிச் செலுத்தவில்லை. இதுதொடர்பாக, ஆலை நிர்வாகத்தின் மீது சிபிஐயிடம் ஓரியண்டல் வங்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் கொடுத்தது.
அதைத்தொடர்ந்து ஆலை நிர்வாகிகளுக்கு எதிராக சிபிஐ கடந்த மாதம் 22-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. ஆலையின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் ஜி.எஸ்.சி.ராவ், ஆலையின் நிர்வாகத் தலைவர் குர்மீத் சிங் மான், அப்போதைய துணை மேலாண் இயக்குநர் (தற்போதைய இயக்குநர்) குர்பால் சிங் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து, தில்லி, ஹாப்பூர், நொய்டா ஆகிய நகரங்களில் சிம்பவ்லி சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, குர்பால் சிங், ஜி.எஸ்.சி.ராவ் ஆகியோரிடம், தில்லியில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
அமலாக்கத் துறை வழக்குப் பதிவு: இதனிடையே, சிம்பெளலி சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு எதிராக கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், தில்லி, நொய்டா, ஹாப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள சிம்பெளலி சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, வங்கிகளிடம் இருந்து ஆலை நிர்வாகம் வாங்கிய கடன்கள் பற்றிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.