இந்தியா

ஆதார் இணைக்க கெடு நீட்டிப்பு: தீர்ப்பு வரும் வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN

ஆதார் தொடர்பான வழக்கில் தாங்கள் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, செல்லிடப்பேசி சேவை, வங்கிச் சேவை உள்ளிட்டவற்றைப் பெறுவதற்கும், அரசின் பல்வேறு மானியங்கள், நலத்திட்ட உதவிகளைப் பெறவும் அவற்றுடன் ஆதார் எண்ணை மார்ச் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்திருந்தது. இதையடுத்து, வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி சேவை என பலவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் அவசரம் காட்டி வந்தனர். இந்நிலையில், இப்போது உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு அந்த காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
ஆதார் அட்டை திட்டத்துக்காக கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழிப் படலங்கள் பதிவு செய்யப்படுவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆதாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர்.
ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை..: இந்நிலையில், இந்த வழக்கு அரசியல்சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பல்வேறு சேவைகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக ஆதார் எண்ணை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுகிறது. இந்த அரசியல்சாசன அமர்வு ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு தொடரும்' என்றனர்.
வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என அனைத்துக்கும் இந்த காலக்கெடு நீட்டிப்பு பொருந்தும். எனவே, உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.
முன்னதாக, வங்கிக் கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் தெரிவித்தது. பின்னர், இந்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அரசு அளித்த விளக்கம்: இதன் மூலம் அரசு வழங்கும் மானியத் தொகை சரியான நபர்களுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படும்; மானியத் தொகை வீணாவது தடுக்கப்படும்; பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதால் கருப்புப் பண உருவாக்கத்தையும், வரி ஏய்ப்பையும் தடுக்க முடியும்; செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதால் பயங்கரவாத செயல்களுக்கும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சிம் கார்டு பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால், ஆதார் அட்டை வழங்குவதற்காக கை விரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனிநபர் ரகசியம் காக்கும் உரிமைக்கு எதிரானது என்பதும், ஆதாரை இணைக்குமாறு கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதும் ஆதார் எதிர்ப்பு மனுதாரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஆதாருக்கு எதிராக முன்னாள் நீதிபதி: கர்நாடக மாநில முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.புட்டசுவாமி தலைமையில் ஆதாருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வருகின்றனர். ஆதாரால் ஏற்பட்டு வரும் பிரச்னைகள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் வாதாடிய புட்டசுவாமி, 'ஆதார் இணைக்கப்படவில்லை என்ற காரணத்தால் பொது விநியோகத் திட்டத்தில் உணவுப் பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதால், நாட்டின் சில இடங்களில் ஏழைகள் உணவு இன்றி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன' என்று வாதிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT