இந்தியா

நாகாலாந்து: நம்பிக்கை வாக்கெடுப்பில் நெபியூ ரியோ அரசு வெற்றி: ஆதரவு-33; எதிர்ப்பு-26

DIN

நாகாலாந்து சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நெபியூ ரியோ தலைமையிலான கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 33 எம்எல்ஏக்களும், எதிர்ப்புத் தெரிவித்து 26 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.
நாகாலாந்து சட்டப் பேரவையில் உள்ள 60 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் ரியோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 
எஞ்சிய 59 தொகுதிகளுக்கான தேர்தலில் நாகாலாந்து மக்கள் முன்னணி 27 தொகுதிகளில் வென்றது. தேசிய ஜனநாயக மக்கள் கட்சி (என்டிபிபி) -பாஜக கூட்டணி 30 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வென்றன.
இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன், என்டிபிபி-பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. 
தேசிய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் நெபியூ ரியோ முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த ஒய். பட்டான் துணை முதல்வராகவும் கடந்த 8-ஆம் தேதி பதவியேற்றனர். இதேபோல், மேலும் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை 16ஆம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் ரியோவை ஆளுநர் பி.பி. ஆச்சார்யா கேட்டுக் கொண்டார். அதன்படி, நாகாலாந்து சட்டப் பேரவையில் ரியோ தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் ரியோ அரசுக்கு ஆதரவாக 33 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். ரியோ அரசுக்கு எதிராக 26 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். சட்டப் பேரவைத் தலைவர் தவிர்த்து, பேரவைக்கு வந்திருந்த 59 எம்எல்ஏக்களும், வாக்கெடுப்பில் கலந்து கொள்வது தொடர்பான கையேட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.
ரியோ அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 33 எம்எல்ஏக்களில், 17 பேர் தேசிய ஜனநாயக மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆவர். எஞ்சியோரில் 12 பேர் பாஜக எம்எல்ஏக்கள், 2 பேர் என்பிபி கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒரு எம்எல்ஏ, ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ, மற்றொருவர், சுயேச்சை எம்எல்ஏ ஆவார். 
முன்னதாக, சட்டப் பேரவைத் தலைவராக தேசிய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் விகோ-ஒ-யோஷூவை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். 
பேரவைத் தலைவர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை.
பேரவைத் தலைவர் யோஷூ, இதற்கு முன்பு 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். தற்போது அவர் அங்காமி-1 தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT