ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிரிழப்பு: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
ஈராக்கில் கடந்த 2014-ல் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்கிழமைதெரிவித்துள்ளார்.
ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
ஈராக்கில் உள்ள மொசூல் என்ற இடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளால் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை மீட்பதற்கு ஈராக் அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை வைத்தது.
முன்னதாக, 2017 ஜூலை மாதம் கடத்தப்பட்டவர்களின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், போதிய ஆதாரமில்லாமல் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறுவது பாவத்திற்குரிய செயலாகும். எனவே அதுபோன்ற செயலை நான் செய்யமாட்டேன் என்றார்.
Advertisement
இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அந்த 39 இந்தியர்களும் இறுந்துவிட்டதாக தற்போது நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 39 இந்தியர்களும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக அவர்கள் ஈராக்கின் மொசூல் என்ற இடத்தில் இருந்துள்ளனர். அந்த இடத்தைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இவர்கள் அனைவரையும் அப்போது கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.