உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹசாரே
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கக் கோரி, தில்லியில் கடந்த 6 நாள்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கக் கோரி, தில்லியில் கடந்த 6 நாள்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வியாழக்கிழமை முடித்துக் கொண்டார்.
பின்னர், தில்லி ராம் லீலா மைதானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசுத் துறையினர், அரசியல் தலைவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக் ஆயுக்த அமைப்புகளும் விரைவில் அமைக்கப்படும் என்று அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதனால், எனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டேன்.
இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு, வரும் ஆகஸ்ட் மாதம் வரை காத்திருப்பேன். அதன் பிறகும், எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், மீண்டும் செப்டம்பர் மாதம் எனது போராட்டத்தைத் தொடர்வேன். மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்வதே அரசின் பணியாகும். போராட்டம் நடத்த வேண்டிய அளவுக்கு அரசின் பணிகள் இருக்கக் கூடாது என்றார் அவர்.
முன்னதாக, ராம்லீலா மைதானத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அளித்த இளநீரைக் குடித்து ஹசாரே தனது உண்ணாவிரத்தை நிறைவு செய்தார்.