முகப்பு
இந்தியா

தமிழக ஐஏஎஸ் அதிகாரியின் ரூ. 2.51 கோடி சொத்துகள் முடக்கம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு

பிகாரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே.செந்தில் குமாரின் ரூ.2.51 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. செந்தில்

Updated On : 30 மார்ச், 2018 at 1:04 AM
பகிர்:

பிகாரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே.செந்தில் குமாரின் ரூ.2.51 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. செந்தில் குமார் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பிகாரில் முங்கேர் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியபோதும், பாட்னா மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றியபோதும் செந்தில் குமார், வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் முறைகேடாக சொத்துகளை சேர்த்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
இப்போது அவர் பிகார் மாநில தொழிலாளர் பயிற்சித் துறை இயக்குநராக உள்ளார்.
பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக ஒப்புதல்கள் கொடுத்து லஞ்சம் வாங்கிக் குவித்ததுடன், அரசுக் கருவூலத்துக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தினார் என்பது செந்தில் குமார் மீதுள்ள முக்கிய குற்றச்சாட்டாகும். கருப்புப் பண முறைகேடு குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு 
செய்துள்ளனர்.
லஞ்சப் பணத்தை வைத்து தமிழகத்தில் தனது குடும்பத்தினர் மூலம் இந்திரா நினைவு கல்வி அறக்கட்டளையை செந்தில் குமார் நடத்தி வருகிறார். மேலும் பாட்னாவில் சூப்பர் மார்க்கெட், சென்னை கஃபே என்ற பெயரில் உணவு விடுதி ஆகியவற்றையும் அவர் வைத்துள்ளார். 
பாட்னாவில் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு, வீட்டு மனைகள், இந்திரா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டடம், அரியலூரில் உள்ள 35 வீட்டு மனைகள் உள்ளிட்டவையும், அவர்களது வங்கிக் கணக்குகளும் அமலாக்கத் துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.
பிகாரில் ஒரே மாதத்தில் இரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீது அமலாக்கத் துறையினர் சொத்து முடக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 
அண்மையில் பிரதீப் குமார் என்று ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.1.8 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.