பிரதமர் மற்றும் எடியூரப்பா மீது அவதூறு பரப்பியதாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது கர்நாடக பாஜக, தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எடியூரப்பா ஆகியோரைக் குறித்து அவதூறாகப் பேசி வருவதாக குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது கர்நாடக மாநில பாஜக, கர்நாடக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
இந்த புகார் தொடர்பான மனுவில் கர்நாடக பாஜக குறிப்பிட்டதாவது:
ஏப்ரல் 29-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் மோடியை வணிக நிறுவனத்தின் விற்பனையாளர் மற்றும் நாட்டை கொள்ளையடித்த திருடன் என்று விமரிசனம் செய்துள்ளார். அதுபோல நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா ஆகியோர் மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கர்நாடக தேர்தல் முடியும் வரை இவர்கள் இருவருக்கும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எந்த கூட்டத்திலும் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையரிடம் கர்நாடக பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.