கர்நாடக தேர்தல் நிறைவு எதிரொலி: பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தின எண்ணெய் நிறுவனங்கள்
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக இருந்தது. அக்காலகட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயித்து வந்தது.
இதையடுத்து, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளித்தது. பின்னர் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது. இந்நிலையில், இந்த நடைமுறைக்குப் பதிலாக, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தின.
அதன்படி, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 19 நாள்களாக அந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன.
கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்றதால், இக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் பாதிப்பை இருக்கும் என்று கருதி, அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து, பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 21 காசுகளும் அதிகரித்துள்ளன.
இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.80ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.66.14ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த புதிய விலையின்படி, டீசல் விலை இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் விலையோ கடந்த 56 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதேபோல், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போதும் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. அந்தத் தேர்தல் முடிந்தவுடனேயே, பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 19 வாரங்களாக பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்காத காரணத்தினால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.