முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இரவு 7:30-க்கு ஆளுநரை சந்தித்தார் மஜத கட்சித் தலைவர் குமாரசாமி.

Updated On : 19 மே, 2018 at 8:17 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:35 PM

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக உரையாற்றிய எடியூரப்பா, தங்களிடம் 104 எம்எல்ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று கூறி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சி பதவியேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நடாக சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 10 மணியளவில் கூடியது. இதில் வெற்றிபெற்ற அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றனர். பின்னர் மாலை 3:30-க்கு முதல்வர் எடியூரப்பா, உணர்ச்சிமிகு உரையாற்றினார். அப்போது பாஜக-வுக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில், மஜத கட்சித் தலைவர் குமாரசாமி, ஆளுநர் வஜுபாய் வாலாவை சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளை ஆளுநரிடம் கடிதமாக வழங்கிய பின்பு, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

Advertisement

இதையடுத்து, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்குமாறு மஜத கட்சித் தலைவர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநில முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி மே 21-ஆம் தேதி பிற்பகல் 12 முதல் 1 மணிக்குள் பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்ததாகவும், அவர்கள் அனைவரையும் பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளதாகவும் குமாரசாமி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.