இந்தியா

தலைமை அர்ச்சகரின் குற்றச்சாட்டுகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி விளக்கம் 

DIN

ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகரின் குற்றச்சாட்டுகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்தார்.

தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் அண்மையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேவஸ்தானத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் குறித்து அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், திருமலையில் விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ஏழுமலையானுக்கு தினசரி கைங்கர்யங்களும், ஆர்ஜித சேவைகளும் திருமலை சின்ன ஜீயர் மற்றும் பெரிய ஜீயர் முன்னிலையில் எவ்வித குறையும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. 

1952-ஆம் ஆண்டு முதல் ஏழுமலையானின் ஆபரணங்கள் தேவஸ்தானத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. அப்போது முதல் அவை பாதுகாப்பாக உள்ளன. 

அவற்றை ஆண்டுதோறும் கணக்கிடும் நீதிபதி ஜெகந்நாத ராவ், நீதிபதி வாத்வா கமிட்டிகளின் அறிக்கைகளில் இதுகுறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆகம ஆலோசனை மண்டலி அனுமதி அளித்தால் அது குறித்த விவரங்கள் வெளிப்படையாக அனைவரும் அறிய வெளியிடப்படும். அது பக்தர்களின் பார்வைக்கும் வைக்கப்படும். ஏழுமலையானுக்கு நடத்தப்படும் ஆர்ஜித சேவைகளும் தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற பிரம்மோற்சவ கருட சேவையின்போது மலையப்ப சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆபரணத்தில் உள்ள சிவப்புக் கல், பக்தர்கள் சில்லறை நாணயங்களை வீசியதால் உடைந்து விழுந்தது. இந்த விவரம் தேவஸ்தான திருவாபரணப் பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. உடைந்த கற்கள், நகைப் பாதுகாவலரிடம் பாதுகாப்பாக உள்ளன. இந்த ஆபரணம் 1945-ஆம் ஆண்டில் அப்போதைய மைசூர் மகாராஜா ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளித்ததாகும். அக்காலத்தில் இந்தச் சிவப்புக் கல்லின் மதிப்பு ரூ.50 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து 2010-ஆம் ஆண்டு பதிவேட்டில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதனால் உடைந்த சிவப்புக் கல், இளஞ்சிவப்பு நிற வைரக்கல் அல்ல.


அரசாணை எண்: 1171 (தேதி 16-12-1987), அரசாணை எண்: 611 (தேதி 16-10-2012) ஆகியவற்றின்படி அர்ச்சகர்கள் பணி ஓய்வு பெறும் வயது 65 என கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது. 

முதுமை காரணமாக பணி ஓய்வு அளிக்கப்பட்ட அர்ச்சகர்களின் வாரிசுகளுக்கே தலைமை அர்ச்சகர் பதவியை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. 

இதற்கு முன் ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள மடப்பள்ளியை செப்பனிடும் பணிகள் குறித்து ஆகம ஆலோசனையாளர் சுந்தரவரதன், திருமலை பெரிய ஜீயர் மற்றும் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் ஆகிய 3 பேரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2001, 2007-ஆம் ஆண்டுகளிலும் மடப்பள்ளி செப்பனிடும் பணிகள் நடத்தப்பட்டன. 

ஏழுமலையானின் கைங்கர்யங்களை ஆகம விதிப்படி நடத்துவதையும், பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதையும் கடமையாகக் கொண்டு தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை மெருகேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT