முகப்பு
இந்தியா

ஐஏஎஸ், ஐபிஎஸ் நியமனத்தில் புதிய முறை: அரசின் திட்டத்துக்கு காங். எதிர்ப்பு

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நிலை மற்றும் துறைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 21 மே, 2018 at 11:35 PM
பகிர்:

குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நிலை மற்றும் துறைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் இத்தகைய நடவடிக்கைகள் அரசு நிர்வாகத்தையே சீர்குலைத்துவிடும் என்றும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட நாட்டின் உயரிய பணிகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் என மூன்று நிலைகளில் தேர்வுகளை யுபிஎஸ்இ நடத்துகிறது.
அவற்றில் வெற்றி பெறுபவர்களின் மதிப்பெண் மற்றும் தர நிலை அடிப்படையில் அவர்கள் ஐஏஎஸ்-ஆகத் தேர்வாகியுள்ளனரா?, அல்லது ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட வேறு நிலைகளில் தேர்வாகியுள்ளனரா? என்பது அறிவிக்கப்படுகிறது. அதேபோன்று, அவர்களுக்கான துறைகளும், எந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்பதும் யுபிஎஸ்இ தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் பின்னர் 3 மாதங்களுக்கு அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்தச் சூழலில் அந்நடைமுறைகளியில் சில மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை பயிற்சியில் எவ்வாறு ஒருவர் செயல்படுகிறார் என்பதைப் பொருத்து அவரை ஐஏஎஸ்-ஆக நியமிக்கலாமா? அல்லது வேறு பணி நிலையில் நியமிக்கலாமா? எனத் தீர்மானிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அனைத்து அமைச்சகங்களின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டு வருகிறது.
இந்நிலையில், அரசின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, பத்திரிகையாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அடிப்படை பயிற்சியின் செயல்பாடுகளைப் பொருத்து ஒருவரது பணி நிலையை முடிவு செய்வது யுபிஎஸ்இ தேர்வு முறையையே கேள்விக் குறியாக்கிவிடும். பிரதமர் மோடியின் இத்தகைய நடவடிக்கைகளால் நிர்வாக நடைமுறைகளே சீர்குலைந்து போகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.