கர்நாடக அரசில் எத்தனை துணை முதல்வர் பதவிகள்? பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படுமா??
கர்நாடகத்தில் ஆட்சியமைப்பது குறித்தும், அமைச்சரவை பங்கீடு தொடர்பாகவும் ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை மஜத தலைவர் குமாரசாமி இன்று சந்திக்க உள்ளார்.
புது தில்லி: கர்நாடகத்தில் ஆட்சியமைப்பது குறித்தும், அமைச்சரவை பங்கீடு தொடர்பாகவும் ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை மஜத தலைவர் குமாரசாமி இன்று சந்திக்க உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வகையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சித்தராமையா, சிவகுமார் ஆகியோரும் தில்லி சென்றுள்ளனர்.
மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குமாரசாமி தில்லி செல்கிறார். ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
Advertisement
காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்களில் எவருக்கெல்லாம் அமைச்சர் பதவி வழங்குவது; எந்த துறைகளை ஒதுக்குவது என்பன குறித்து அப்போது விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில், வரும் 23-ஆம் தேதி முதல்வராக குமாரசாமியும், புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் - மஜத இடையே கூட்டணி அமைந்துவிட்டாலும், அமைச்சரவை பங்கீட்டில் மிகப்பெரிய சிக்கல் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், வீரசைவ மகாசபா அமைப்பு, தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி உட்வட 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக் கொள்வார். அவருக்கு அடுத்த நிலையில், இரண்டு துணை முதல்வர் பதவி ஏற்படுத்தப்படலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 34 பேர் கொண்ட கர்நாடக அமைச்சரவையில் 18 முதல் 20 அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் என்றும், முதல்வர் பதவி மற்றும் 14 இடங்களை மதசார்பற்ற ஜனதா தளம் வைத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
மத மற்றும் பகுதி வாரியாக அமைச்சரவையில் ஒரு சம நிலையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத இருப்பதால் 2 துணை முதல்வர் பதவி ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
78 தொகுதிகளைக் கொண்ட காங்கிரஸ் கட்சியில் 17 பேரும், மஜதவில் 4 பேரும் வீரசைவ - லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அமைச்சரவையில் தங்களுக்கு மிகப்பெரிய பங்கு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
துணை முதல்வர் பதவி குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியாவுடனான சந்திப்பின் போது முடிவு செய்யப்படும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னதாக, கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செய்தியாளர்களை குமாரசாமி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுக்கு அவர் அளித்த பதில்:
அமைச்சரவை பங்கீடு தொடர்பாக இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்களுடன் அதுகுறித்து எதுவும் விவாதிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா ஆகியோரைச் சந்திக்க திங்கள்கிழமை தில்லி செல்கிறேன். அப்போது கர்நாடகத்தில் புதிய அரசை அமைப்பது குறித்தும், அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன். அதன் பிறகே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
தலா 30 மாதங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸும், மஜதவும் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற பல தகவல்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகின்றன. அவற்றை நம்ப வேண்டாம்.
24 மணி நேரத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும்: காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் எங்களுக்கு 15 நாள் கால அவகாசத்தைக் கொடுத்துள்ளார். என்றாலும் அதுவரை காத்திருக்காமல் 24 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.