காங்கிரஸ்-மஜத கூட்டணி நிலையான ஆட்சி தரும்: குமாரசாமி
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு நிலையான ஆட்சியைத் தரும் என்று மாநில முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு நிலையான ஆட்சியைத் தரும் என்று மாநில முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி கூறினார்.
அமைச்சரவை பதவிப் பகிர்வு விவகாரத்தில் காங்கிரஸýடன் பேரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவித்த அவர், இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும் என்றும் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார் குமாரசாமி. அப்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொறுப்பாளரான கே.சி.வேணுகோபால் உடனிருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி கூறியதாவது: பதவியேற்பு விழாவுக்கு வருமாறு சோனியா, ராகுலுக்கு அழைப்பு விடுத்தேன். கலந்துகொள்வதாக அவர்களும் உறுதியளித்தனர். துணை முதல்வர் பதவி, அமைச்சரவைப் பதவிப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான நடைமுறைகளை ராகுல் தெளிவுபடுத்தியுள்ளார் என்று குமாரசாமி கூறினார்.
இந்நிலையில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே அமைச்சரவைப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களை சுமூகமாக கையாளும் வகையில் 5-6 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைந்த குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அத்துடன், பேரவைத் தலைவர் பதவி காங்கிரஸýக்கு வழங்கப்படவுள்ளது.
அமைச்சரவைப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பெங்களூரில் இரு கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கலந்தாலோசிக்கும்போது, யாருக்கு துணை முதல்வர் பதவியை அளிக்கலாம் என்பதையும் காங்கிரஸ் முடிவு செய்யவுள்ளது.
துணை முதல்வர் பதவிக்கான போட்டியில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரின் பெயரும் உள்ளது. மேலும், ஒரு சில அமைச்சர்களே புதன்கிழமை பதவியேற்றுக்கொள்வர் என்று அந்த வட்டாரங்கள் கூறின. இந்நிலையில், அமைச்சரவையில் 20 பதவிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாயாவதியுடன் சந்திப்பு: இதனிடையே, காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்புக்கு முன்பாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியை குமாரசாமி சந்தித்தார்.