ராஜ்கோட்: குஜராத்தில் தலித் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அம்மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் முகேஷ் சாவ்ஜி வானியா (40).தலித் சமூகத்தைச் சார்ந்தவர். இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பகுதியில் குப்பை பொறுக்க வந்த பொழுது, அருகில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஐந்து பேர் அவரை தொழிற்சாலை கேட்டில் கட்டி வைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பேன்ட் பெல்ட் மற்றும் தடி ஆகியவற்றைக் கொண்டு 5 பேரும் அவரைக் கடுமையாக அடித்தனர்.
தொழிற்சாலையில் இருந்து வானியா திருடியதாக சந்தேகம் கொண்டு அவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த அவரது மனைவி உள்பட இரு பெண்கள், வானியா மீதான தாக்குதலை தடுத்தபோது, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து தப்பித்த இருவரும் உடனடியாக போலீஸாரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். அங்கு வந்து வானியாவை மீட்டு ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தால் மட்டுமே வானியாவின் உடலை பெறுவோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் விளக்கம் கேட்டு அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.