இந்தியா

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் அலோக் வர்மா, அஸ்தானா வாக்குமூலம்

DIN

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் தங்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் (சிவிசி) வியாழக்கிழமை வாக்குமூலம் அளித்தனர். அப்போது அலோக் வர்மா தன் மீதான குற்றச்சாட்டை மறுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து மத்திய புலனாய்வு ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
 சிவிசி அலுவலகத்துக்கு நண்பகல் ஒரு மணியளவில் வந்த அஸ்தானா, இருவரும், ஆணையர் கே.வி. செüதரியை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அத்துடன் புலனாய்வு ஆணையர் சரத் குமாரையும் இருவரும் சந்தித்தனர்.
 முன்னதாக, அலோக் வர்மா மீதான அஸ்தானாவின் புகார் குறித்த விசாரணைக்காக, சிபிஐ-யில் உள்ள ஆய்வாளர் முதல் கண்காணிப்பாளர் வரையிலான அதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.
 அந்த அதிகாரிகள் அனைவரும், மொயின் குரேஷி ஊழல் வழக்கு, முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொடர்புடைய ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கு, எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றது தொடர்புடைய கால்நடை கடத்தல் வழக்கு ஆகியவற்றில் விசாரணை அதிகாரிகளாக இருப்பவர்களாவர் என்று அந்த வட்டாரங்கள் கூறின. அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானா அளித்துள்ள புகார் தொடர்பாக 2 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறு சிவிசி-க்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 பின்னணி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் புகார்கள் கூறியதை அடுத்து சர்ச்சை எழுந்ததால் இருவரும் தற்போது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
 முன்னதாக, சிபிஐ அமைப்பில் கூடுதல் இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு, சிறப்பு இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ஆட்சேபம் தெரிவித்தார். எனினும், ராகேஷ் அஸ்தானா சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
 இந்நிலையில் வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம், அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டினார்.
 இதுதொடர்பாக மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில், சிவிசி விசாரணை மேற்கொண்டது. அப்போது, அஸ்தானாவுக்கு எதிராக 6-க்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக அலோக் வர்மா தெரிவித்தார். இந்நிலையில், வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவிப்பதற்காக அவரிடம் இருந்து ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது கடந்த 15-ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT