இந்தியா

ஆந்திர அமைச்சரவை விரிவாக்கம்: 2 பேருக்கு அமைச்சர் பதவி

DIN

ஆந்திர அமைச்சரவையை அந்த மாநிலத்தின் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு விரிவாக்கம் செய்துள்ளார். இதன்படி, அமைச்சரவையில் புதிதாக 2 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதையடுத்து, ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் 2 பேர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இதனால் அமைச்சரவையில் இரு இடங்கள் காலியாக இருந்தன.
 அந்த இடத்தை நிரப்பும் வகையில், ஆந்திர அமைச்சரவையை சந்திரபாபு நாயுடு விரிவாக்கம் செய்துள்ளார். அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் என். எம்.டி. ஃபரூக், கேதாரி ஸ்ரவண் குமார் ஆகிய 2 பேரை சந்திரபாபு நாயுடு சேர்த்துள்ளார்.
 அமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்கள் 2 பேருக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் செய்து வைத்தார். தெலுங்கு மொழியில் ஃபரூக் பதவிபிரமாணம் எடுத்து கொண்டார். ஸ்வரண் குமார் ஆங்கிலத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
 அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ள ஸ்ரவண் குமார், மாவோயிஸ்டுகளால் கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவின் மகன் ஆவார். அமைச்சராக பதவியேற்ற பின்னர், சந்திரபாபு நாயுடுவை நோக்கி சென்ற குமார், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
 இதேபோல், அமைச்சராக பதவியேற்றுள்ள ஃபரூக், மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் அமைச்சரவையிலும், சந்திரபாபு நாயுடு அமைச்சரவையிலும் ஏற்கெனவே அமைச்சராக இருந்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநில சட்டப் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். அவர், ராயலசீமா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
 புதிதாக அமைச்சர்களாக பதவியேற்ற ஃபரூக், ஸ்ரவண் குமார் ஆகியோருக்கு ஆளுநர் நரசிம்மன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT