இந்தியா

கிரிமினல் குற்ற விபரங்களை விளம்பரம் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்  

DIN

புது தில்லி: வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் மீதுள்ள கிரிமினல் குற்ற விபரங்களை நாளேடுகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.  

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு ஒன்றில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின், தங்களின் குற்றப்பின்னணி குறித்து நாளேடுகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுக்கப்படுவதை வைத்து, விளம்பரங்களைப் பார்த்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவியாக இருக்கும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10-ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 'அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை தொலைக்காட்சி, நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறையாவது வெவ்வேறு தேதிகளில் மக்கள் அறியும் படி விளம்பரம் செய்வது கட்டாயமாகும் என்று தெரிவித்திருந்ததது.

இதே தகவலை திருத்தப்பட்ட வேட்பாளர் படிவம் 26-லும்   வேட்பாளர்கள் குறிப்பிட வேண்டும்.தாங்கள் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும், எவ்வளவு கிரிமினல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது  எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதையும் வேட்பாளர்கள் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். இதனை குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளங்களில் பதிவிட வேண்டும்.

அதேசமயம் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் அளிக்கப்பட்டதற்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

தங்கள் மீது எந்தவிதமான கிரிமினல் வழக்குகளும் இல்லாவிட்டால் வேட்பாளர்கள் நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தேவையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

இத்தகைய விளமபரங்களுக்கான செலவை வேட்பாளரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சியோ ஏற்க வேண்டும், அது தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். அவ்வாறு செயல்படாத வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்.

மேலும் அவ்வாறு கிரிமினல் விவரங்களைத் தாக்கல் செய்யாமல் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு எதிராக அவரோடு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரோ அல்லது வாக்காளரோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். 

அதேநிலையில் எதிர்தரப்பு வேட்பாளர் குறித்து தவறான தவல்களை நாளேடுகளில் பிரசுரித்தாலும் அதைச் செய்த வேட்பாளருக்கு அபராதமும், கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT