இந்தியா

சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

DIN


மலையாள மாதமான விருச்சிகம் மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில் நடை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக வந்த ஹிந்து இயக்க மூத்த பெண் தலைவர் சசிகலாவை கேரள காவல்துறையினர் கைது செய்தனர். அதைக் கண்டித்து மாநிலத்தின் பிற பகுதிகளில் 12 மணி நேர முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், பக்தர்களின் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக இதுவரை எந்தவொரு இளம்பெண்ணும் கோயிலுக்கு செல்ல இயலவில்லை. 
இந்நிலையில், 2 மாத கால மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோயிலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரியின் மேற்பார்வையில், சனிக்கிழமை அதிகாலையில் அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டன.
சன்னிதானம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கைது நடவடிக்கை: ஐக்கிய வேதி என்ற ஹிந்து இயக்கத்தின் மூத்த பெண் தலைவர் சசிகலா, இருமுடி கட்டி ஐயப்பனை வழிபடுவதற்காக அதிகாலை 2.30 மணியளவில் சபரிமலைக்கு பயணித்தார். ஆனால், மரக்கூடம் என்ற இடத்திலேயே அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சசிகலா ஐயப்பன் கோயிலில் வழிபடுவதற்கு பாரம்பரிய மரபுகளின்படி எவ்வித தடையும் இல்லை என்ற போதிலும் அவரை காவல்துறை கைது செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோயில் நடை சாத்தியிருக்கும் இரவு நேரத்தில் சபரிமலையில் தங்கியிருக்க பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், அந்த சமயத்தில் சசிகலா வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். 
இதேபோன்று, மற்றொரு ஹிந்து இயக்கத் தலைவரான சுதீர் என்பவரையும் காவல்துறை கைது செய்தது. சசிகலா ரண்ணி காவல்நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கு சனிக்கிழமை காலையில் கூடிய அவரது ஆதரவாளர்கள் பக்திப் பாடல்களை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT