இந்தியா

பணமதிப்பிழப்பு - ஊழல் ஒழிப்புக்கான கசப்பு மருந்து : பிரதமர் மோடி

DIN


நாட்டில் புரையோடி போயிருந்த ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வெளிக்கொணர்ந்து வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்காகவும்தான், பணமதிப்பிழப்பு என்னும் கசப்பு மருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டில் இதுவரை 1.25 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு ஆதரவாக ஜாபூவா என்ற இடத்தில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கரையான்களை ஒழிக்க நச்சு மிகுந்த மருந்துகளை நாம் பயன்படுத்துவதுண்டு. அதைப்போலவே, நாட்டில் இருந்த ஊழலை ஒழிக்க உயர் மதிப்புடைய ரூபாய் தாள்களை தடை செய்யும் கசப்பு மருந்து நடவடிக்கையை நான் மேற்கொண்டேன்.
இதன் காரணமாக, யாரெல்லாம் தங்கள் வீடுகளில் மெத்தைகளுக்கு கீழேயும், அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களிலும் பணத்தை பதுக்கி வைத்திருந்தனரோ, அவர்களெல்லாம் தற்போது ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி செலுத்த தொடங்கியிருக்கின்றனர். அந்த வரிப் பணத்தை சாமானியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.
பொய்யான வாக்குறுதிகள்: வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதியை மத்தியப் பிரதேச விவசாயிகள் நம்ப வேண்டாம். அது பொய்யானது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், கடன் தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதைச் செய்வதற்குப் பதிலாக விவசாயிகளை சிறைக்கு அனுப்புவற்கான நடவடிக்கைகளை அங்குள்ள அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2008-இல், நாட்டில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டு இருந்த நிலையில், நாட்டில் உள்ளஅனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் அப்போதைய காங்கிரஸ் அரசு உறுதி அளித்தது. ஆனால் அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக முடிந்துவிட்டது.
அதே சமயம், எங்களுடைய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் கீழ், நாட்டில் 14 கோடி பேருக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்த 4 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை, காங்கிரஸ் கட்சி மேற்கொண்டிருந்தால் 10 ஆண்டுகள் ஆகியிருக்கும்.
ம.பி. அரசுக்குப் பாராட்டு: மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பொதுமக்கள் நிலை எப்படி இருந்தது? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தின் நலனில் அக்கறை கொள்ளும் அரசு அப்போது இருந்திருக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் 55 ஆண்டுகால ஆட்சியில் இந்த மாநிலத்தில் வெறும் 1,500 பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் 4,000 பள்ளிகளை பாஜக முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கொண்டு வந்துள்ளார். சிறுவர், சிறுமியருக்கு கல்வி வழங்க வேண்டும், இளைஞர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும், பெரியோர்களுக்கு மருந்துகள் வழங்க வேண்டும் என்பதே எங்களது தாரக மந்திரம்.
அனைவருக்கும் வீடு: நாட்டில் உள்ள அனைவருக்கும் 2022-ஆம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகளை வழங்க வேண்டும் என்பதே எங்களது கனவு. இதுவரையில் 1.25 கோடி மக்களுக்கு நாங்கள் வீடுகளை வழங்கியிருக்கிறோம்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு, ரிமோட் கட்டுப்பாட்டிலும், அம்மையாரின் கட்டுப்பாட்டிலும் இயங்குவதாக இருந்தது.
ஆனால், நான் நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸுக்கு அதுதான் பிரச்னையாக இருக்கிறது என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT