விவசாயிகள் தங்களது குறைகளைச் சொல்ல தில்லிக்குள் நுழையக்கூட முடியவில்லை: ராகுல்
தங்களது குறைகளைச் சொல்ல தில்லிக்கு வர முயன்ற விவசாயிகள் காவலர்களால் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: தங்களது குறைகளைச் சொல்ல தில்லிக்கு வர முயன்ற விவசாயிகள் காவலர்களால் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தி தினத்தில், தில்லியின் எல்லைக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, தங்களது கோரிக்கைகளை முன்வைக்க, விவசாயிகளால் தில்லிக்குள் நுழையக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ராகுல் கூறியுள்ளார்.
வேளாண் கடன்கள் தள்ளுபடி, ஜிஎஸ்டியில் இருந்து டிராக்டர்களுக்கு விலக்கு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லிக்குள் பேரணியாக வர முயன்ற பாரதிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் எழுபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லியின் எல்லைப் பகுதியானா காஸியாபாத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விவசாயிகளைக் கலைக்க அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ராகுல் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் காந்தி ஜெயந்தித் தினக் கொண்டாட்டம், விவசாயிகள் மீதான தடியடியுடன் தொடங்கியிருப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.