இந்தியாவின் கலாசார அங்கமாகத் திகழ்கிறது அறிவியல்!: ராம்நாத் கோவிந்த்
"இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கமாக அறிவியல் திகழ்கிறது' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
"இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கமாக அறிவியல் திகழ்கிறது' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெüவில் நான்காவது இந்திய சர்வதேச அறிவியல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான சனிக்கிழமை இந்த விழாவை முறைப்படி தொடங்கி வைக்கும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுப் பேசியதாவது: பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள லக்னெüவில் இந்த அறிவியல் விழா நடைபெறுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அறிவியல் எப்போதுமே இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கமாகத் திகழ்ந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது மூதாதையர்கள் கணிதம், பூஜ்ஜியம் ஆகியவற்றின் கருத்தாக்க ரகசியங்களை வெளிப்படுத்தினர். அறிவியலின் அனுபவங்களை மருத்துவம், உலோகத் தூய்மை போன்ற தளங்களில் பயன்படுத்தவும் செய்தனர்.
நாட்டில் 1947-ஆம் ஆண்டுக்கு பிறகு அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது. பசுமைப் புரட்சியில் இருந்து விண்வெளித் திட்டம் வரை பலவற்றிலும் அறிவியல் உந்து சக்தியாக இருந்து வருகிறது. தற்போது 21-ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியானது, "ரோபோடிக்ஸ்' காலமாக உள்ளது. மிகப்பெரிய வளர்ச்சிக்கான உரிய காலமாகும் இது. அறிவியலை மக்கள் இயக்கமாக மாற்றாமல், இந்த வளர்ச்சியை எட்ட முடியாது. இந்தியாவை, மேம்பட்ட தொழில்துறை பலம் வாய்ந்த நாடாக மாற்றுவதற்கு, அறிவுசார் படைப்பு சக்தியை மேம்படுத்துவது அவசியமாகும். 2012 - 2017ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தாயகத்தில் ஆராய்ச்சி வாய்ப்புகளை தொடர்ந்து மேற்கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து 649 இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்பினர். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் 243 விஞ்ஞானிகள் மட்டுமே நாடு திரும்பினர்.
இந்திய "ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் காப்புரிமை விண்ணப்பங்கள் 2016-இல் 61 என்ற நிலையில் இருந்தது. இது 15 மடங்கு அதிகரித்து 2017-இல் 909 ஆக உயர்ந்துள்ளது. 2018-இல் இந்தியாவினுடைய ஆராய்ச்சி, வளர்ச்சி முதலீடுகள் 83.27 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள பிரதமரின் ஆராய்ச்சி "ஃபெல்லோ ஷிப்' திட்டமானது புதுமைகள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கும். 2018-19இல் தொடங்கி 7 ஆண்டுகளுக்கான இத்திட்டத்துக்காக ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராம்நாத் கோவிந்த்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில், 'நாட்டில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், இளம் மாணவர்கள், பெண்கள் ஆகியோரை அறிவியல் துறையில் ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் அறிவியல் துறை பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. நானோ தொழில்நுட்பத்திலும் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. இந்தியாவின் சிஎஸ்ஐஆர் நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது. தடுப்பூசி உற்பத்தியிலும் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை உலகுக்கு அளித்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன . அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இந்தியாவை நாடுகின்றன. 2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பிரதமர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்' என்றார்.
உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத், விஞ்ஞான பாரதிய அமைப்பின் தலைவர் விஜய் பட்கல், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் அசுதோஷ் சர்மா , மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் ரேணு ஸ்வரூப் உள்ளிட்ட பலர் பேசினர்.
உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா மற்றும் ஏராளமான மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றனர்.