ஊருக்கு உபதேசம் சொல்லும் ராகுலும், எதிர்க்கட்சிகளும்: அருண் ஜேட்லி சாடல்
பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு நடவடிக்கையில், ராகுல் காந்தியும் அவரது தோழமைக் கட்சிகளும் ஊருக்கு உபதேசம் சொல்லுகிறார்கள் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
புது தில்லி: பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு நடவடிக்கையில், ராகுல் காந்தியும் அவரது தோழமைக் கட்சிகளும் ஊருக்கு உபதேசம் சொல்லுகிறார்கள் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் வரிகளை மத்திய அரசு குறைத்தது போல மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று அருண் ஜேட்லி கோரிக்கை வைத்தார்.
ஆனால், பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரிக் குறைப்பு செய்யப்படவில்லை. இதனைச் சுட்டிக்காட்டும் வகையில் அருண் ஜேட்லி காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் அருண் ஜேட்லி, பொதுமக்களுக்கு நன்மை தருவது குறித்து கருத்துகளை டிவிட்டரிலும், தொலைக்காட்சியிலும் கூறுவதில் மட்டுமே ராகுல் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு நன்மை தரும் விஷயங்கள் குறித்து கருத்துக் கூறுவது என்றால் சரி, அதுவே அதனை செயல்படுத்துவது என்றால் வேறு வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.