உன்னாவ் தொகுதியில் ராகுல் போட்டியிட தயாரா?: சாக்ஷி மகராஜ் சவால்
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மக்களவைத் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அந்தத் தொகுதி பாஜக எம்.பி. சாக்ஷி
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மக்களவைத் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அந்தத் தொகுதி பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில், உன்னாவ் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று ராகுல் காந்திக்கு சவால் விடுக்கிறேன். அவ்வாறு போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுவிட்டால், அரசியலை விட்டே விலகிவிடுவேன். ஆனால், அவர் தோல்வியடைந்துவிட்டால், இந்தியாவிலிருந்து வெளியேறி, இத்தாலிக்கு சென்றுவிட வேண்டும் என்றார் அவர்.
மேலும், ராகுல் காந்தி அண்மையில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டதையும் சாக்ஷி மகராஜ் விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்பவர்கள், புனிதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், புனிதத்தை கடைப்பிடிக்காமல், ராகுல் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவர் சில நேரங்களில் இஸ்லாமியர்களின் குல்லாவை அணிவார். திடீரென சிவ பக்தர் ஆகிவிடுவார் என்றார். மேலும், பாஜகவைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுவதாகவும்; எனவேதான், பெரியக்கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.