பாலியல் துன்புறுத்தல் குறித்து காலவரம்பின்றி புகார் அளிக்க அனுமதி: சட்ட அமைச்சகத்துக்கு மேனகா காந்தி கடிதம்
#MeToo ஹேஷ்டேக்கின் தாக்கமாக, பாலியல் துன்புறுத்தல் குறித்து காலவரம்பின்றி புகார் தெரிவிக்க அனுமதி வழங்க மேனகா காந்தி இன்று (திங்கள்கிழமை) சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
#MeToo ஹேஷ்டேக்கின் தாக்கமாக, பாலியல் துன்புறுத்தல் குறித்து காலவரம்பின்றி புகார் தெரிவிக்க அனுமதி வழங்க மேனகா காந்தி இன்று (திங்கள்கிழமை) சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிறுவயதில் பாலியல் அச்சுறுத்தல் மற்றும் பாதிப்புக்குள்ளான பெண்கள் #MeToo ஹேஷ்டேக் பிரசாரம் மூலம் சமூக வலைதளங்களில் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பாலியல் குற்றங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான காலவரம்பை நீக்குமாறு சட்ட அமைச்சகத்தை கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில்,
Advertisement
Advertisement
"பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் யார் என்று எப்போதும் நினைவில் இருக்கும். எந்த காலவரம்பு இல்லாமல் புகார் தெரிவிக்க அனுமதி வழங்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். எவ்வளவு தாமதம் ஆனாலும் அது பிரச்னை இல்லை. 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட புகார் அளிக்கும் வகையில் பரிந்துரை செய்துள்ளேன்" என்றார்.
இந்திய தண்டனையியல் சட்டம் 468-ன்படி சிறார் வன்கொடுமை உட்பட எந்த குற்றமாக இருந்தாலும் சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குள் புகார் தெரிவிக்க வேண்டும். அப்படி 3 ஆண்டுகளுக்கு முன் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
நீதிக்காக புகார் அளித்தாலோ, அல்லது கால தாமதத்துக்கான காரணத்தை சரியாக விளக்கினாலோ, வழக்கின் தன்மை உணர்ந்து அந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.
சிறார் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்கையில் தான் நிறைய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அவர்கள் 18 வயது அல்லது அதற்கு மேலாக இருந்தால் தான் புகார் அளிக்க முடியும்.
அதனால், மேனகா காந்தியின் இந்த பரிந்துரையை சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டால் இது பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.