இந்தியா

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் செயல்பட அனுமதித்த உத்தரவு தொடரும்

 நமது நிருபர்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியால் நியமனம் செய்யப்பட்ட 3 பேர் எம்எல்ஏக்களாக செயல்படுவதற்கு ஜூலை 19-ஆம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் 22-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், "யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையிலும், துணைநிலை ஆளுநருக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை தன்னிச்சையாக நியமிக்க அதிகாரம் உள்ளது.
 அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை நியமன எம்எல்ஏக்கள் செயல்படவும், பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவும் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், "நியமன எம்எல்ஏக்களை ஆளுநர் நியமித்திருந்தாலும், மாநில அரசின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். தனக்கு வேண்டப்பட்டவர்களை எம்எல்ஏக்களாக ஆளுநர் நியமித்துள்ளார்' என்றார்.
 இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அதன் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் மறுப்புத் தெரிவித்துடன், "அரசியல் சாசன சட்டத்தின்படியே எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கை தற்போதே முடித்தை வையுங்கள்' என்றார்.
 வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, சட்டப்பேரவைச் செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர். மேலும், அதுவரை முந்தைய உத்தரவு தொடரும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT