இந்தியா

சபரிமலை கோயிலுக்கு விரைவில் பெண்களுடன் சென்று வழிபாடு: பெண்ணிய ஆர்வலர் த்ருப்தி தேசாய்

DIN

சபரிமலை கோயிலுக்கு விரைவில் பெண்களுடன் சென்று வழிபாடு செய்யவுள்ளதாக பெண்ணிய ஆர்வலர் த்ருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். 

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள அரசு மற்றும் தேவசம் போர்டு முடிவு செய்தது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் போராட்டங்களும், பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சனிக்கிழமை காலை கொச்சியில் உள்ள முக்கிய சாலைகளில் ஐயப்ப படங்களுடன் பேரணி நடத்தினர். 

இந்நிலையில், சபரிமலை கோயிலுக்கு விரைவில் பெண்களுடன் சென்று வழிபடவுள்ளதாக ஆர்வலர் த்ருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், 

"நாங்கள் விரைவில் சபரிமலைக்கு செல்ல இருக்கிறோம். தற்போது பக்தர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். சபரிமலை கோயிலுக்கு வழிபட வரும் பெண்களை வரவேற்குமாறு போராட்டத்தை நடத்திவரும் பக்தர்களை கேட்டுக்கொள்கிறேன்.

பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவர்களா என்று காங்கிரஸ் மற்றும் பாஜகவை கேட்கிறேன். அவர்கள் தங்களது நிலைப்பாட்டை விளக்கவேண்டும்" என்றார்.

த்ருப்தி தேசாய்யின் இந்த கருத்துக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பதில் தந்துள்ளனர். 

பந்தளம் அரண்மனைக் குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் தெரிவிக்கையில், "கோபத்தை தூண்டும் இந்த முடிவை சமூக ஆர்வலர் மாற்றிக்கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கை பாதுகாக்க இடதுசாரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார். 

ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், 

"இது அபாயகரமான அணுகுமுறை. சபரிமலைக்கு வருவதை அவர் தவிர்க்கவேண்டும். சபரிமலையை பதற்றமான பகுதியாக மாற்றக்கூடாது. அவர் ஐயப்ப பக்தரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்காக வருகிறார். 

ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் கூறுகையில், 

"த்ருப்தி தேசாய் கோயிலுக்கு செல்ல முயன்றால் சபரிமலைக்கு செல்லும் சாலைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுடைய போராட்டம் காந்திய வழியில் இருக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT