இந்தியா

சமரசத்துக்கு தயார்:  தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயன்று வரும் அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

மேலும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மாநில அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அந்த கோரிக்கையை மாநில அரசு நிராகரித்து விட்டது. மாநில அரசின் முடிவை எதிர்த்து, சபரிமலை செல்லும் வழியில் அமைந்துள்ள நிலக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. 

சபரிமலை நடைத் திறப்பு நாளான புதன்கிழமை காலை முதலே பம்பை, நிலக்கல், எருமேலி என பாதை நெடுகிலும் பதற்றமாகக் காணப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். சபரிமலை கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்கு முன்னால் நிலக்கல்லில் திரண்ட ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பெண்களையும், பெண் செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியதில், ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது, எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செல்லவில்லை. சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தயார் என தேவசம் போர்டு கூறியதற்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள இந்து அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். சபரிமலை கோயில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என கோயில் தந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT