முகப்பு
இந்தியா

அமிருதசரஸ் ரயில் விபத்து: 33 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் 33 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் 33 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரயில் மோதியதில் உயிரிழந்த 61 பேரின் உடல்களும் ஆங்காங்கே சிதறியிருந்ததால், உடல்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதுவரை 33 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவர்கள் அருகில் உளள 7 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சம்பவத்தின் பின்னணி: அமிருதசரஸ் நகரில் உள்ள ஜோரா பதக் பகுதியில் தசரா விழா கொண்டாட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் மாலை நடைபெற்ற விழாவில் திரளானோர் பங்கேற்றனர். ரயில் தண்டவாளத்தையொட்டி உள்ள மைதானத்தில் ராவண வதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதைக் காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். நிற்பதற்குக்கூட இடம் இல்லாமல் நெருக்கடியாக இருந்தது. இதனால், அருகில் இருந்த தண்டவாளத்திலும் மக்கள் நின்றுகொண்டு ராவண வதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஜலந்தர் நகரிலிருந்து அமிருதசரஸ் நோக்கி அவ்வழியே ரயில் வந்துகொண்டிருந்தது.

ராவண வதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததாலும், இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததாலும் ரயில் வந்துகொண்டிருந்தது அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுக்கு தெரியவில்லை. ரயில் வந்துகொண்டிருந்த சப்தமும் அவர்களுக்கு கேட்கவில்லை. இந்த நேரத்தில் ரயில் மோதியது. மேலும், ஒரே நேரத்தில் எதிரெதிர் புறத்தில் இரு ரயில்கள் வந்துகொண்டிருந்தால் பலரால் தப்பிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அமிருதசரஸ் மாவட்ட துணை ஆட்சியர் ராஜேஷ் சர்மா கூறுகையில், விபத்து நேர்ந்த பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 61 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றார்.

அமிருதசரஸ் காவல் துறை ஆணையர் எஸ்.எஸ்.ஸ்ரீவஸ்தவா கூறுகையில், இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

ரயில் வருவது தொடர்பான முன்னறிவிப்பு எதுவும் விழா ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விழாவில் எம்எல்ஏ நவ்ஜோத் கௌர் சித்து தலைமை விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். விபத்துக்கு பிறகு அவருக்கு எதிராக அங்கிருந்தவர்கள் கோஷமிட்டனர். எனினும், அவர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ரூ.5 லட்சம் இழப்பீடு-பஞ்சாப் முதல்வர்: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.  விபத்து குறித்து விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெளியிட்ட பதிவில், போர்க்கால அடிப்படையில் மாவட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் சிலர் கூறுகையில், ராவண வதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தது. 

வெடியிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஒரு பகுதியினர் தண்டவாளத்தை நோக்கி பின் நகர்ந்தனர். இதனால், ஏற்கெனவே அங்கு நின்றுகொண்டிருந்தவர்களும் பின்னால் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த ரயில் அவர்கள் மீது மோதியது என்று தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.