தில்லி பெட்ரோல் நிலையங்கள் போராட்டம்: ஆம் ஆத்மி பாஜக பரஸ்பர குற்றச்சாட்டு
தில்லியில் பெட்ரோல் நிலையங்கள் போராட்டம் தொடர்பாக மாநில அரசான ஆம் ஆத்மியும் மற்றும் மத்திய அரசான பாஜக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தில்லியில் பெட்ரோல் நிலையங்கள் போராட்டம் தொடர்பாக மாநில அரசான ஆம் ஆத்மியும் மற்றும் மத்திய அரசான பாஜக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத தில்லி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (திங்கள்கிழமை) காலை 6 மணியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை தில்லியில் உள்ள 400 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்துக்கு தில்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் இந்தப் போராட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக ஆதரவு தெரிவித்தது.
இதுதொடர்பாக, மாநில பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில்,
Advertisement
"தில்லியில் வாட் வரி குறைக்கப்படாததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதற்கு ஆம் ஆத்மி தான் காரணம். தில்லி மக்கள் கூடுதலாக ரூ.2.5 கொடுத்து பெட்ரோல் வாங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், மக்கள் தில்லிக்கு வெளியில் இருந்து பெட்ரோல் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இந்த பிடிவாத குணத்தையும், முடிவையும் கண்டிக்கிறேன்.
ஆம் ஆத்மி அரசு மக்களின் நலனுக்காக பணிபுரிய வேண்டும். அப்படி முடியாவிட்டால் அரவிந்த் கேஜரிவால் தனது பொறுப்பை ராஜிநாமா செய்யவேண்டும்" என்றார்.
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தலைவர் ராகவ் சதாதா கூறுகையில்,
"தில்லியில் உள்ள பெட்ரோல் நிலையங்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு பாஜக தான் அறிவுறுத்தியுள்ளது. ஒரு சில பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் பாஜகவின் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இதர பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபடாவிட்டால் தங்களுடைய சொத்துகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவர் என்றும் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் முழுமையாக பாஜகவால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 12 முறை அதிகரித்துள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்காமல் தில்லியில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை போராட்டத்தில் ஈடுபட வைக்கிறது.
முதலில் கச்சா எண்ணெய் விலையை மத்திய அரசு குறைக்கவேண்டும். மேலும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டுவரவேண்டும். கலால் வரி மூலம் மட்டுமே மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலாக பெறுகிறது" என்றார்.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் காரணமாக, மத்திய அரசு கடந்த 4-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 குறைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் வாட் வரியை குறைத்தது.
இன்றைய (திங்கள்கிழமை) நிலவரப்படி, தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.34 மற்றும் டீசல் ரூ.74.92 என விற்பனை ஆகிறது.