முகப்பு
இந்தியா

கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகத்தில் 105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது

Updated On : 4 செப்டம்பர், 2018 at 4:48 AM
பகிர்:

கர்நாடகத்தில் 105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது.
3 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள், 53 பேரூராட்சிகள், 20 நகர பஞ்சாயத்துகள் ஆகிய 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 67.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கியது. 
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. மொத்தம் 2,662 வார்டுகளில் 982 வார்டுகளை கைப்பற்றி காங்கிரஸ் முதலிடம் பிடித்தது. அடுத்தபடியாக, பாஜகவுக்கு 929, மஜதவுக்கு 375, பகுஜன்சமாஜ் கட்சிக்கு 13, பிற கட்சிகளுக்கு 34, சுயேச்சைகளுக்கு 329 இடங்கள் கிடைத்துள்ளன.
காங்கிரஸ்: 3 மாநகராட்சிகளில் ஒன்றையும் கைப்பற்ற முடியாதநிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாநகராட்சியான மைசூரு, துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வரின் சொந்த மாநகராட்சியான தும்கூருவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. 
29-இல் 5 நகராட்சிகள், 53-இல் 19 பேரூராட்சிகள், 20-இல் 7 நகர பஞ்சாயத்துகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 105 உள்ளாட்சி அமைப்புகளில் 31-ஐ அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது.
பாஜக: பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பாவின் சொந்தமாவட்டமான சிவமொக்காவில் உள்ள ஒரே ஒரு மாநகராட்சியில் பாஜக அமோகமாக வெற்றிபெற்றுள்ளது. 29-இல் 9 நகராட்சிகள், 53-இல் 10 பேரூராட்சிகள், 20-இல் 7 நகர பஞ்சாயத்துகளை பாஜக கைப்பற்றியுள்ளது. பாஜக, மொத்தமுள்ள 105 உள்ளாட்சி அமைப்புகளில் 27 இடங்களில் வென்றுள்ளது. 
மஜத: தென்கர்நாடகத்தில் மஜத மைசூரு, மண்டியா, சாமராஜ்நகர், தும்கூரு ஆகிய மாவட்டங்களில் கூடுதலான இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள மஜத, இந்தத் தேர்தலில் வெறும் 375 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மைசூரு மாநகராட்சியில் பாஜகவுக்கு 22, காங்கிரஸுக்கு 19, மஜதவுக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளதால், அங்கு இழுபறி நீடிக்கிறது. 
சுயேச்சைகள்: உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சைகள் 329 பேர் வெற்றிவாகைச்சூடியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.