காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்: பாஜக எம்எல்ஏவின் மகன் கைது
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் எம்எல்ஏவின் மகனை போலீஸார்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் எம்எல்ஏவின் மகனை போலீஸார் கைது செய்தனர்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தாமோ மாவட்டத்துக்குச் சென்று காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்க சிந்தியா திட்டமிட்டுருந்தார்.
இந்நிலையில் தாமோ மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏவான உமா தேவி காதிக்கின் மகன் பிரின்ஸ் தீப் (19), முகநூலில் ஒரு பதிவிட்டார். அதில், தாமோ மாவட்டத்தில் உள்ள தங்கள் தொகுதிக்குள் சிந்தியா வந்தால், அவர் சுட்டுக் கொல்லப்படுவார்' என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனுராக் வர்த்தன், காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, பிரின்ஸ் தீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரின்ஸ் தீப்பை அவரது தாயாரும், எம்எல்ஏவுமான உமா தேவி காதிக், திங்கள்கிழமை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். அங்கு அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மை முகத்தைக் காட்டுவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது' என்றார்.