முகப்பு
இந்தியா

காஷ்மீர்: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க பிரிவினைவாதிகள் அழைப்பு

ஜம்மு - காஷ்மீரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அந்த மாநில பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 2:38 AM
பகிர்:


ஜம்மு - காஷ்மீரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அந்த மாநில பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தத் தேர்தல் மூலம் காஷ்மீரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே மத்திய ஆட்சியாளர்கள் முயலுகின்றனர் என்றும், இதனால் மாநில மக்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த மாநிலத்தில் பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரிவினைவாதத் தலைவர்கள் சையது அலி கிலானி, மீர்வாய்ஸ் உமர், யாசின் மாலிக் உள்ளிட்டோர் இதுதொடர்பாக திங்கள்கிழமை கலந்தாலோசித்தனர். 
கிலானியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தேர்தல் புறக்கணிப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்தை அவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
ஆலோசனை நிறைவடைந்த பிறகு பிரிவினைவாதத் தலைவர்கள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதேபோன்று கடந்த 2014 பேரவைத் தேர்தலின்போதும் பிரிவினைவாதத் தலைவர்கள் புறக்கணிப்பு அழைப்பை விடுத்தனர். ஆனால், அப்போது 25 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வாக்குகள் பதிவானதும், மக்கள் ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.