முகப்பு
இந்தியா

கேரளத்தில் கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை ஆகஸ்டில் விடுக்கப்பட்டது: மத்திய அரசு அதிகாரி தகவல்

கேரளாவில் கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை ஆகஸ்டில் விடுக்கப்பட்டது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:18 AM
பகிர்:

கேரளாவில் கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை ஆகஸ்டில் விடுக்கப்பட்டது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாகவும், அதன் இணையதளத்தில் ஆகஸ்ட் 9 முதல் 22 வரை பதிவேற்றப்பட்ட வானிலை அறிக்கையில் கேரளத்தில் கனமழை, மிக கனமழைப் பொழிவு குறித்து எச்சரிக்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய புவி அறிவியல் துறை உயர் அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: 
கேரளத்தில் மழைப்பொழிவு தொடர்பான தேவையான அனைத்து எச்சரிக்கைகளும் இந்திய வானியல் ஆய்வு மையத்தின் திருவனந்தபுரம் அலுலகத்திலிருந்து விடுக்கப்பட்டன. இத்துடன் மாவட்டந்தோறும் மழைப்பொழிவு குறித்த முன்னறிவிப்புகள் அந்த இணையதளத்தில் படத்துடன் நாள்தோறும் மூன்றுமுறை பதிவேற்றப்பட்டன. அடுத்த மூன்று மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்புகளும் குறுஞ்செய்தி வழியாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கும், மாநில அவசர நடவடிக்கைகள் மையத்துக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டன.
கனமழை, பலத்த காற்று குறித்த வானிலை எச்சரிக்கை உள்ளிட்ட 5 நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்புகள் கேரளத்தின் தலைமைச் செயலருக்கும், கேரளத்தின் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலருக்கும், மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கும், கப்பற்படை, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்பட்டன.
முதல்வர் தலைமையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகளுக்கும் அதிக அளவில் மழைப் பொழிவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆகஸ்ட் 9 முதல் 15-ஆம் தேதி வரை அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கும் என்பதையும், இதே தகவல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 
இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை கனமான மழை முதல் மிக கன மழை குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டது. இதுபோல ஆகஸ்ட் 12, 14 ஆகிய தேதிகளில் மிக கனமழை குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டது. கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி அதிக அளவு கனமழை இருக்கும் என தெரிவிக்கும் எச்சரிக்கை ஆகஸ்ட் 15-ஆம் தேதியே விடப்பட்டது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.