நாடு முழுவதும் மழை-வெள்ளத்துக்கு இதுவரை 1,400 பேர் பலி: 10 மாநிலங்கள் கடுமையாக பாதிப்பு
நாடு முழுவதும் மழை-வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மழை-வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மீட்பு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:
நாடு முழுவதும் 10 மாநிலங்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றுக்கு இதுவரை 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரள மாநிலத்தில் மட்டும் 488 பேர் பலியாகியுள்ளனர். கேரளத்தில் அண்மையில் நேரிட்ட மழை-வெள்ளத்துக்கு 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த 54.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 14.52 லட்சம் பேர், கேரளத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 57,024 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மழை-வெள்ளத்துக்கு 254 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 210 பேரும், கர்நாடகத்தில் 170 பேரும், மகாராஷ்டிரத்தில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அஸ்ஸாமில் 50 பேரும், உத்தரகண்டில் 37 பேரும், ஒடிஸா மாநிலத்தில் 29 பேரும், நாகாலாந்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் 43 பேரை காணவில்லை. அதில் கேரளத்தில் 15, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 5, உத்தரகண்டில் 6, கர்நாடகத்தில் 3 பேர் அடங்குவர். 10 மாநிலங்களிலும் மழை தொடர்பான சம்பவங்களில் 386 பேர் காயமடைந்துள்ளனர்.
மழை-வெள்ளத்தால் ஒடிஸா மாநிலத்தில் 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் 26 மாவட்டங்கள், அஸ்ஸாமில் 25 மாவட்டங்கள், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 23 மாவட்டங்கள், கேரளத்தில் 14, உத்தரகண்டில் 13, கர்நாடகம், நாகாலாந்தில் தலா 11, குஜராத்தில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் 11.47 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 27,964 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் 2.28 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 48,552 ஹெக்டேர் நிலங்கள் சேதமடைந்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 3.42 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,873 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. கர்நாடகத்தில் 3.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,521 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது என்று அந்த புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.