பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் - ஒரே அட்டை' திட்டம்: நீதி ஆயோக் அறிவிப்பு
பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் - ஒரே அட்டை' திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் - ஒரே அட்டை' திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் தேசிய அளவில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும். சுங்கச் சாவடிகளிலும் இந்த அட்டை மூலம் பணம் செலுத்தலாம்.
தில்லியில் திங்கள்கிழமை அடுத்த தலைமுறை போக்குவரத்து மேம்பாட்டை நோக்கி இந்தியா' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமிதாப் காந்த் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்துத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொதுப் போக்குவரத்து துறை என்பது மிகவும் முக்கியமானது. எனவே, மக்களின் தேவைக்கு ஏற்ப நவீன போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதும், அது தொடர்பான திட்டமிடல்களும் மிகவும் அவசியம். போக்குவரத்துத் துறை முழுவதும் மின்னணு மயமாக்கப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாக நமது நாட்டில் விரைவில் பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் - ஒரே அட்டை' திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மக்களின் வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
போக்குவரத்து அதிகரிக்கும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து கிடைப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலைப் போக்குவரத்துத் துறையின் பங்களிப்பு 4 சதவீதமாக உள்ளது.
நாட்டின் பல முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பது கவலையளிக்கிறது. இது தவிர கச்சா எண்ணெய் விலை உயர்வால், நாட்டின் எரிபொருள் செலவு அதிகரிக்கிறது.
இது அன்னியச் செலாவணி கையிருப்பிலும் பாதிப்பை உருவாக்குகிறது. இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.