சென்னை: ரபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சச்சின் பைலட் கூறினாா்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
"இந்தியாவின் பாதுகாப்புக்கு 126 போர் விமானங்கள் வாங்க வேண்டும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இந்திய விமானப்படை கோரிக்கை வைத்தது. அதன்படி, காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி ஏற்பட்டது.
பாஜக ஆட்சியில் அதே போர் விமானத்தை 3 மடங்கு விலையாக, அதாவது ஒரு விமானத்தை ரூ.1,670 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இதே விமானத்தை குறைவான விலைக்கு வாங்கி உள்ளன.
36 ரபேல் போர் விமானங்களுக்காக மட்டுமே மக்கள் வரிப்பணம் ரூ.41, 205 கோடி அளவுக்குக் கூடுதலாகக் கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பான விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், பாதுகாப்பைக் காரணமாக கூறி மக்களை பாஜக அரசு ஏமாற்றி வருகிறது.
நாட்டுக்கு அவசரமாக தேவை என்று ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகும் 4 ஆண்டுகளாகியும் விமானங்கள் இதுவரை வாங்கப்படவில்லை.
விமானம் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவனத்தை நீக்கி விட்டு, 12 நாள்களுக்கு முன் உருவாக்கப்பட்ட விமான உற்பத்தியில் அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞா்கள் வேலையில்லாமல் திண்டாடி வரும் சூழ்நிலையில் பொதுத்துறை நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டு இருந்தால், ஏராளமான மானவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கும்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்காமல், 'மான் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் மட்டுமே பேசி வருகிறார்.
இந்த பிரச்னையை பொருத்தவரை அரசே முன்வந்து விளக்கம் அளித்தால் தான் தீர்வு கிடைக்கும்.
ரபேல் ஊழல் குறித்து மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம். நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்" என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.